Farming
இயற்கை விவசாயத்தில் பூச்சியைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர அழிக்க
முடியாது.
இயற்கை விவசாயத்தில் பெருமளவு உபயோகிக்கப்படும் செயற்கை உரங்கள்,
பூச்சிக் கொல்லிகள், ஹார்மோன்கள் மற்றும் தீவனச் சேர்க்கைகள் போன்ற
செயற்கை இடுபொருள்களைத் தவிர்த்து, பயிர் சுழற்சி, பயிர் கழிவுகள்,
கால்நடைகளின் எருக்கள், பண்ணைக்கு வெளியே கிடைக்கும் அங்ககக்
கழிவுகள், கனிம பாறை சேர்க்கைகள், உயிரியல் அமைப்பு சார்ந்த பயிர்
பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பெயர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிச்
செய்வதே அங்கக விவசாயம் ஆகும்.
இயற்கை விவசாயத்தில் பூச்சியைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர அழிக்க
முடியாது. அதனால் பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம், பூச்சி எதிர்ப்பு
பயிர்வகைகள் போன்ற வகைகளில் சுற்றுச்சூழலை மாறுபடச் செய்து
பூச்சிகளைத் தவிர்க்கலாம்.
இயற்கை விவசாயத்தில் பூச்சி மேலாண்மையின்
அவசியம் என்ன?
வயலில்
இயற்கை பூச்சி எதிரிகளைக் காக்க நாம் வயல் ஓரங்களில் புதர்வேலி மற்றும்
மரவரிசை அமைக்கலாம். இயற்கை பூச்சித்தடுப்புகளான பூச்சி வேட்டையாடி
கள் ஒட்டுண்ணிகள், நோய்க்கிருமிகள் போன்றவற்றை வயலில் சரியான
நேரத்தில் விடலாம். மேலும், இனக்கவர்ச்சிப்பொறி, பூச்சி ஈர்ப்புகள் மற்றும்
இயற்கை பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
உழவியல் முறைதான் முதலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி இயற்கை பூச்சி
எதிரிகளை ஊக்குவிக்கும். நோய்க்கிருமிகளைக் கொண்டு பூச்சிகளைக்
கட்டுப்படுத்தும் முறை உயிரியல் பூச்சி மேலாண்மை எனப்படும். விவசாயிகள்
செயற்கை பூச்சி ஈர்ப்புகளைப் பயன்படுத்தும்போது பூச்சியின் வாழ்க்கை
சுழற்சியில் மாறுதல் ஏற்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
பலதரப்பட்ட பயிர்களை ஒன்றிணைத்தல்
இது அங்கக வேளாண்மையின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. ஒரு
நிலத்தில் ஒரே வகையான பயிரைத் தொடர்ந்து பயிரிடும்போது ஒரு
குறிப்பிட்ட பயிர் வளர்ச்சிச் சத்தின் அளவு அந்நிலத்திலிருந்து அதிகளவில்
உறிஞ்சப்பட்டு சத்துப்பற்றாக்குறை ஏற்படுகிறது. பயிர்ச்சத்துக் குறைபாடு
பூச்சிகளின் எண்ணிக்கையையும், அவற்றின் தாக்கத்தையும்
ஊக்குவிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள்
கலப்புப்பயிர், ஊடுபயிர் போன்ற முறைகளைக் கடைப்பிடித்துள்ளனர்ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்களைக் குறிப்பிட்ட நிலத்தில் பயிரிடும்போது
சத்துகள் மறுசுழற்சி அடைகின்றன. இதனால் மண்ணின் வளம் மேம்படுகிறது
. வளமான மண்ணில் வளரும் திடமான பயிர்களில் பூச்சிகள் தாக்கம்
குறைந்தே காணப்படும். ஊடுபயிர் செய்யப்பட்ட நிலங்களில் பூச்சிகளால்
விருப்பு வெறுப்புகளுக்குள்ளான பயிர்கள் இரண்டும் காணப்படுவதால்
அவை பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் சுற்றுச்சூழலை
உருவாக்குகின்றது. உதாரணமாக, சோளத்தில் துவரையை ஊடுபயிராகப்
பயிரிடும்போது சோளக்கதிர்களைத்தாக்கும் கதிர் நாவாய்ப்பூச்சிகளின்
எண்ணிக்கையும் துவரையில் தோன்றும் காய்ப்புழுக்களின் எண்ணிக்கையும்
குறைந்து காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் பாசிப்பயறில்
சோளத்தை ஊடுபயிராகப் பயிரிடும்போது சோளத்தண்டுத்
துளைப்பான்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது.
பூச்சிகள்
பயிர் ரகத்தேர்வு
நல்ல தரமான விதைகளையும், பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டுள்ள
ரகங்களையும், குறுகிய காலங்களில் முதிர்வடையும் ரகங்களையும்
தேர்ந்தெடுத்து பயிரிடுவதன் மூலமாக அங்கக வேளாண்மையில் சீரான
லாபத்தை ஈட்டிட முடியும்.
விதைக்கும் பருவம்
விதைகளை விதைக்கிற அல்லது பயிர்களை நடுகிற பருவங்கள் சிறிதளவு
மாற்றத்துக்கு உட்படுத்தப்படும்போது அந்தப் பயிர் ஒரு குறிப்பிட்ட பூச்சியின்
தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்.
உதாரணமாக, சம்பா பருவத்தில் முன்கூட்டியே நடவு செய்யும் நெற்பயிரில்
இலைச்சுருட்டுப் புழுக்களின் தாக்கம் குறைந்து காணப்படும்.
செப்டம்பர் மாதத்தில் நடப்படும் நெற்பயிரில் ஆணைக்கொம்பனின்
தாக்குதல் அதிகரித்துக் காணப்படும்.
செப்டம்பர் மாதத்துக்கு முன்பாக விதைக்கப்படும் சோளத்தில் குருத்து
ஈக்களின் தொந்தரவு குறைந்து காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பயிர் அடர்த்தி
பயிர் விதைப்பின் அடர்த்தியையோ, நடவின் அடர்த்தியையோ சிறிதளவு
மாற்றத்துக்கு உட்படுத்தும்போது பூச்சிகளின் எண்ணிக்கையிலும், அவற்றின்
தாக்குதலிலும் மாற்றம் ஏற்படுகிறது.
உதாரணமாக, கொண்டைக்கடலையில் குறைந்த அடர்த்தி விதைப்பு
காய்ப்புழுக்களின் எண்ணிக்கையையும் அதிக அடர்த்தி அசுவினியின்
எண்ணிக்கையையும் குறைத்திட உதவிடும்.
நெல்லில் குறைந்த அடர்த்தி நடவு இலைச்சுருட்டுப்புழு மற்றும் புகையானின்
எண்ணிக்கையைக் குறைந்திட வழிவகுக்கும்அதேபோல் கரும்பில் குறைந்த அடர்த்தி விதைப்புத் தண்டு துளைப்பானைக்
குறைத்திட ஏதுவாக அமைந்திடும். பயிர் அடர்த்தியால் பூச்சிகள்
கட்டுப்படுத்தப்படும்.
வாழும் இடம் மாற்றங்கள்
வாழ்விட மாற்றம் என்பது ஒரு சில பயிரில் காணப்படும் பூச்சி அப்பயிர்
அறுவடை முடித்ததும் அப்பகுதியிலேயே தன் வாழ்க்கைக்கு ஏற்ற மற்ற
பயிர்களின் (வரப்பில் உள்ள களை நச்சுகளை) அடைந்து மீண்டும் தனக்கு
சாதகமான பயிர் வரும் வரை காத்திருக்கும் நிகழ்ச்சியே. எனவே, முக்கிய
பயிர்களில் காணப்படும் களைச்செடிகளையும் இதரச் செடிகளையும்
கண்டறிந்து அவற்றை முற்றிலுமாகக் களைந்து பயிர்களின் வாழிடத்தில்
குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். ஏனெனில், அவை
பூச்சிகளுக்குப் புகலிடமாகத் திகழ்ந்து பருவ காலங்களில்
பயிர்களைத்தாக்கிடும் காரணிகளாகத் திகழ்கின்றன. வயல்களின்
வரப்புகளிலும், மூலை முடுக்குகளிலும் பூச்சிகளைக் கவரும் தாவரங்களையும்
பூச்சிகளை விரட்டிடும் செடிகளையும் வைத்திருப்பதன் மூலமாக முக்கியப்
பயிரில் தோன்றும் பூச்சிகளின் சேதத்தை ஓரளவுக்குக் குறைத்திடலாம்.
சாகுபடி வயல்
பயிர் சுழற்சி
பயிர் சுழற்சி மூலம் பூச்சியின் வாழுமிடம் மாறுபட்டு அவை அழிந்துவிடும்.
அதுதான் மிக சுலபமான பூச்சி கட்டுப்படுத்தும் முறையாகும். அவ்வாறு
செய்யும்போது வயலில் உள்ள பூச்சிகள் அழிவதோடு மண்வளமும்
அதிகரிக்கும். பசுந்தாள் உரமிட்டு உழவு செய்யும்போது பூச்சியின் வாழ்க்கை
சுழற்சியில் மாறுபட்டு பூச்சியின் இனப்பெருக்கம் குறையும். பயிர்சுழற்சி
மேற்கொள்வதால் இயற்கை பூச்சி எதிரிகளான சாறுண்ணிகளும்
ஒட்டுண்ணிகளும் அதிகரித்து பூச்சியைக் கட்டுப்படுத்தும்.
உழவு செய்தல்
வயலை உழுவதால் மண்ணில் உள்ள பூச்சியின் முட்டைகள் மற்றும் பூச்சிகள்
அழிந்துவிடும். அங்கக வேளாண்மையில் நிலத்தை உழுவதால் பூச்சி மற்றும்
அதனால் ஏற்படும் குறைகளைக் கட்டுப்படுத்தலாம். உழுவதைக் குறைத்தால்
பூச்சியின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வேளாண் வயல்
உயிரியல் முறைப் பூச்சி மேலாண்மை
பயிர்களில் தீங்கு செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள்
வைத்திருக்கும் பொருட்டு இயற்கை தந்த நன்கொடை பூச்சிகளின், `
இயற்கை எதிரிகள்'. இவ்வாறு உயிருள்ள இயற்கை உயிரினங்களைக்
கொண்டு தீங்கு செய்யும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்துவதற்கு
உயிரியல் முறை பூச்சி மேலாண்மை என்று பெயர். உயிரியல் காரணிகளைச்
சாறுண்ணிகள், ஒட்டுண்ணிகள், நோய்க்கிருமிகள் என மூன்று வகைகளாகப்
பிரிக்கலாம்.
சாறுண்ணிகள்
இவற்றை இரை விழுங்கிகள் என்றும் அழைப்பர். இவை பெரும்பாலும்
உருவில் பெரியவை. சுறுசுறுப்பாக வேகமாக நகரும் குணம் கொண்டவை.
இவை கூர்மையான பார்வைத்திறனைக் கொண்டிருக்கும். இவற்றைவிட
உருவில் சிறிய பூச்சிகளை அதிக எண்ணிக்கையில் உண்ணும் திறன்
படைத்தவை. நாம் அன்றாடம் பார்க்கும் தட்டான், ஊசித்தட்டான் போன்றவை சாறுண்ணி வகையைச் சார்ந்தவையே. நோய்க்கிருமிகள்
இவை பூச்சிகளில் நோயை ஏற்படுத்தி அழித்திடும் நுண்கிருமிகளாகும். பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்றவை இவற்றுள் அடங்கும். பிவேரியா, வெர்டிசிலியம், மெட்டாரைசியம் வகையைச் சார்ந்த பூஞ்சையினங்களும், பேசில்லஸ் வகையைச்சார்ந்த பாக்டீரியாக்களும், நியூக்ளியர் மற்றும் கிரெனலோசிஸ் வகையைச்சார்ந்த வைரஸ்களும் பூச்சிக்கட்டுப்பாட்டில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
பூஞ்சையினங்கள், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, தண்டுத்துளைப்பான் மற்றும் இலையை உண்ணும் பூச்சிகளைக் கட்டுப்படுத்திடும் திறன் வாய்ந்தவை. பூஞ்சையினங்கள் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக காற்றீரப்பதமாக சூழ்நிலைகளில் அதிக அளவில் பூச்சிகளைத்தாக்கி அழித்திடும் குணமுடையன.
வேப்பிலை
தாவர பூச்சிக்கொல்லிகள்
பூச்சிகளின் எண்ணிக்கை அபரிதமாகப் பெருகிடும் போதும், அருகாமையிலுள்ள வயல்களிலிருந்து பரவிடும்போதும் பூச்சிகளின் தன்மை மற்றும் அளவைப் பொறுத்து ரசாயனப்பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாகத் தாவரப்பூச்சிக் கொல்லிகளை அங்ககப் பூச்சி மேலாண்மையில் பயன்படுத்திடலாம். இவற்றை நம் முன்னோர்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வந்துள்ளனர். வேம்பு, நொச்சி, எருக்கு, ஆடாதோடா, அரளி, தும்பை, சோற்றுக் கற்றாழை, புங்கம், இலுப்பை, சீத்தாப்பழம் போன்ற தாவரங்கள் சிறந்த பூச்சிக்கொல்லி தன்மையைப் பெற்றுள்ளன. இவை எளிதில் கிடைப்பதாலும், விவசாயிகளால் எளிதில் பயன்படுத்த முடிவதாலும் அங்ககப் பூச்சிக் கட்டுப்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றன.
5 கி.கி.வேப்பங்கொட்டையை நன்றாக இடித்து 100 லிட்டர் தண்ணீரில் 3 முதல் 4 நாட்கள் ஊறவைத்து வடிகட்டி தெளிக்கலாம். இவற்றை இலைப்பேன், அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் இலையை உண்ணும் புழுக்களையும் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். இவை நன்மை செய்யும் சிலந்தி இனங்கள், தேனீக்கள், ஊண்உண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
வேம்பு, புங்கன், இலுப்பை போன்ற தாவர எண்ணெய்கள் பூச்சிகளை விரட்டவும், கொல்லவும் அங்கக வேளாண்மையில் பயன்படுத்தப்படுகின்றன. 1 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து பயிர்களில் நன்கு படும்படி தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பொதுவாக, எண்ணெயைத் தண்ணீரில் ஊற்றும்போது அவை தண்ணீரில் கலக்காமல் அவற்றின் மேல் மிதக்கும். அவை தண்ணீரில் நன்கு கலக்க சோப்பு திரவம் அல்லது காதி சோப்பு பயன்படுத்தப்படுகின்றது. எண்ணெய் தண்ணீர் கலவையில் சோப்பு திரவத்தைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அப்போது பால் போன்ற திரவம் தோன்றும். பால் போன்ற தன்மை மாறும் வரை சோப்பு திரவத்தைச் சேர்த்து நன்கு கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் தண்ணீர் சோப்பு கலவை தெளிவான தன்மையை அடைந்தவுடன் பயிர்களின் மேல் தெளித்து பூச்சிக் கட்டுப்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்.
இனக்கவர்ச்சிப் பொறி
இனக்கவர்ச்சி மற்றும் கவர்ச்சிப்பொறிகள்
பூச்சிகள் சுரக்கும் இனக்கவர்ச்சி திரவம் (pheromones) மற்ற பூச்சிகளை ஈர்க்கும். இந்தத் திரவத்தின் மணம் ஒவ்வொரு பூச்சிகளுக்கும் மாறுபடும். இனக்கவர்ச்சிப்பொறி பூச்சிகளைக் கண்காணிக்கவும் கூட்டமாக ஈர்க்கவும் பயன்படும். இதன்மூலம் வயலில் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறிய முடியும். மாலத்தியான் மற்றும் மெதீதில்யூஜினால் போன்ற பூச்சிக்கொல்லிகளைக் கவர்ச்சி பொறிகளில் வைத்து பூச்சிகளை அழிக்கலாம்.
கட்டுரையாளர்கள்:
க.விஜயலெட்சுமி, உதவிப் பேராசிரியர் (பூச்சியியல் துறை), இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, துறையூர், திருச்சி.
இரா.சுரேஷ், உதவிப் பேராசிரியர் (உழவியல் துறை), குமரகுரு வேளாண்மை கல்லூரி, ஈரோடு.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்
கருத்துகள்
கருத்துரையிடுக