முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலும் மேலாண்மை முறைகளும்

 

தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலும் மேலாண்மை முறைகளும்




தென்னை வளர்ப்பில் பூச்சி, நோய்த் தாக்குதல் உழவர்கள் நெடுங்காலமாகச் சந்தித்து வரும் பிரச்சினை. சுமார் 800 பூச்சியினங்கள் தென்னையைத் தாக்கிச் சேதத்தை விளைவித்து வந்தாலும் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, கருந்தலைப் புழு, எரியோபிட் சிலந்தி, சுருள் வெள்ளை ஈ போன்றவை தென்னைச் சாகுபடியில் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடியவை. இந்த வெள்ளை சுருள் ஈ பற்றியும் அதன் மேலாண்மை முறைகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அமெரிக்காவில் 2004-ல் பெலிஸ், புளோரிடா மாகாணத்திலும் தென்னையில் கண்டறியப்பட்ட சுருள் வெள்ளை ஈ, இந்தியாவில் முதல்முறையாக 2016-ம் ஆண்டு பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னையில் கண்டறியப்பட்டது. இந்த ஈ அனைத்து ரகத் தென்னையிலும் பாதிப்பு ஏற்படுத்தினாலும் சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் பச்சை குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு ரகங்களில் அதிக அளவில் தாக்குதலை ஏற்படுத்துகின்றன. இதேபோல் கொய்யா, மா, நாவல், வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி, சீத்தாபழம், கருவேப்பிலை போன்றவற்றையும் இவை தாக்குகின்றன.



“பெண் ஈயைவிட, ஆண் ஈ அளவில் சிறியது. இதன் முன் இறக்கைகளில் கரும்புள்ளிகள் காணப்படும். வயது முதிர்ந்த பெண் ஈ மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளைச் சுருள் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் இடுகின்றன. முட்டைகள் ஒருவித மெழுகுப் பூச்சுடன் காணப்படும். அதிலிருந்து இளம்பூச்சிகள் வெளிவரும். இவை நான்கு பருவங்களைக் கடந்து, பொய்க்கூட்டுப்புழுப் பருவத்தை அடையும்.

அதற்குப் பிறகு முதிர்ந்த ஈக்களாக வெளிவரும். 20-30 நாட்களில் புழுப் பருவம் வளர்ச்சியடைந்து, கூட்டம் கூட்டமாகத் தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தஞ்சமடையும். காற்றின் மூலம் அடித்துச் செல்லப்பட்டு, ஒரு மரத்தில் இருந்து அடுத்தடுத்த மரங்களுக்கும், அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்”.



இளம்பூச்சிகளும் முதிர்ந்த ஈக்களும் சாறு உறிஞ்சும். இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக் கழிவால், கேப்னோடியம் என்ற கரும்பூஞ்சானம் படரும். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சி, அதிகப்படியான வெப்பம், குறைந்த அளவு காற்றின் ஈரப்பதம் போன்ற காரணங்களால் வெள்ளை ஈக்கள் அதிகரித்திருக்கக்கூடும். ஏனெனில், மழைக்காலங்களில் இவற்றின் தாக்குதல் குறைவாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

“மஞ்சள் நிறம், வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களைக் கவரும் தன்மை உடையது. மஞ்சள் நிற பாலித்தீன் தாளால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகளை 3 அடி நீளம், 1 அடி அகலம் என்ற அளவில், ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்கவிட்டு, இவற்றின் நடமாடத்தைக் கண்காணிக்கலாம். பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் படுமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும்.



கிரைசோபெர்லா என்ற இரை விழுங்கிகள், வெள்ளை ஈக்களை அனைத்து வளர்ச்சி நிலைகளிலும், விரும்பி உண்ணும் என்பதால், அவற்றை ஹெக்டேருக்கு 1000 என்ற எண்ணிக்கையில் தென்னந்தோப்புக்குள் வளர்ப்பதன் மூலம் இந்த வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த முடியும். வெள்ளை ஈக்கள் பாதிக்கப்பட்ட தோட்டங்களில், அதன் எதிரிகளான காக்ஸ்னேல்லிட் என்ற பொறி வண்டுகள், என்கார்ஸியா என்ற ஒட்டுண்ணிகள் இயற்கையாகவே உருவாகும்.

ஐஸீரியா ஃபியூமரோசா என்ற பூஞ்சாணத்தை உற்பத்தி செய்து வெள்ளை சுருள் ஈக்கு எதிராக பயன்படுத்தலாம்.

இவை காணப்படும் ஓலைகளைச் சிறிது, சிறிதாக வெட்டி, பாதிக்கப்பட்ட தென்னை மர ஓலைகளின் மேல் வைக்கலாம். மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ள இடங்களில், 5 மி.லி. வேப்ப எண்ணெய், 1 சதவீதம் அசாடிராக்டின், 2 மி.லி. டீப்பால் அல்லது சோப்பு ஆகிய ஏதெனும் ஒன்றை, ஒரு லிட்டர் தண்ணீரில் ஓலையின் அடிப்பகுதி நன்றாக நனையுமாறு தெளிக்க வேண்டும். கரும்பூஞ்சாணத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மைதா மாவு, ஸ்டார்ச், அரிசிக் கஞ்சி கரைசல் ஆகிய ஏதாவது ஒன்றை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், பூஞ்சாணம் உதிர்ந்துவிடும். இவ்வாறான முறைகளைப் பின்பற்றி சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

கட்டுரையாளர்கள்:
1. எ. செந்தமிழ்,
முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல்),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் – 60 8002.

2. பூ. நந்தினி,
முதுநிலை வேளாண் மாணவி (பயிர் நோயியல்),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் – 60 8002.

கருத்துகள்

Popular Posts

விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்

  விவசாயிகளையும் விவசாயத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான  மானியங்களை வழங்குகிறது. மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும். இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். விதை மானியம் உரம் மானியம் நீர்ப்பாசன மானியம் மின்சார மானியம் ஏற்றுமதி மானியம் கடன் மானியம் விவசாய உபகரணங்கள் மானியம் விவசாய உள்கட்டமைப்பு மானியம் விதை மானியம் அ...

நடவு முதல் மானியம் வரை

  தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம். நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil )  தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடிய...

பாரம்பரிய களர்ப்பாலை நெல்

 திருவண்ணாமலை கிராமத்தில் பாரம்பரிய களர்ப்பாலை நெல் ரகத்தை காப்பாற்றும் விவசாயிகள்: களர் நிலங்களுக்கு தீர்வா? தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதும், அவற்றை மீண்டும் உழவுக்கு கொண்டு வருவதும் பல பகுதிகளில், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களால் முன்னெடுக்கப்படுகிறது. களர் நிலம், உவர் நிலம், வெள்ளம் சூழும் நிலம் போன்ற குறிப்பிட்ட சில வகை நிலங்களுக்குப் பொருத்தமாக இருப்பதும், அந்த நிலங்களில் விவசாயம் செய்ய இன்றியமையாததாகவும் இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்கள் மிகச் சில. அப்படி ஒரு ரகம் களர்ப்பாலை. களர், உவர் நிலங்களில் பயிர் செய்ய ஏற்றதாக தமிழ்நாட்டில் இருந்துவந்த ஒரே ரகமான களர்ப்பாலை, அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டது. ஆனால், திருவண்ணாமலை அருகே உள்ள நாகப்பாடி என்ற கிராமத்தில் காலம் காலமாக களர்ப்பாலை பரவலாக பயிர் செய்யப்படுவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சிவப்பரிசி தரும் களர்ப்பாலையை கடைசியாக காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஊராக நாகப்பாடி இருப்பதோடு, நாகப்பாடி விவசாயிகள், களர்ப்பாலை விதைகளை பிற மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கி வருகின்றனர். களர் நிலத்தை கொண்டுள்ள விவசாயிகளுக்கு நெல் சாகுபட...